Saturday, January 31, 2009

வித்தை காட்டிய விருந்தாளிகள்!



ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் வேடந்தாங்கலுக்கு வந்த பறவைகள் பற்றிய தகவல்கள் பத்திரிகையில் இடம்பெறும். கட்டாயம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வரும். ஆனால் செயல்படுத்தியதில்லை. சென்ற வாரம் எந்தவித திட்டமிடலும் இன்றி திடீரென்று கிளம்பினோம். தாம்பரத்தில் காலை பதினோரு மணிக்கு பஸ் ஏறினோம். 12 மணிக்கு செங்கல்பட்டு போய்ச் சேர்ந்தோம். மதிய உணவு வாங்கிக்கொண்டு, வேடந்தாங்கல் பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏற வேண்டியிருந்தது.

வழியில் பல கிராமங்கள். பொட்டல் வெளிகள். காடுகள். ஏரிகள். கோயில்கள். கடைகள். ஒரு மணி நேரப் பயணத்தின் முடிவில் வேடந்தாங்கல் வந்து இறங்கினோம். நுழைவுச் சீட்டு வாங்கும் இடத்தில் பறவைகளைப் பற்றிய பொதுவான விஷயங்கள் விளக்கிச் சொல்லப்பட்டிருந்தன. வாடகைக்கு பைனாகுலர்கள் கிடைக்கின்றன. டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம்.

ஏரிக் கரையிலிருந்து ஐம்பது அடி தூரத்தில் நாரைகள் (Stork) கம்பீரமாக அமர்ந்திருந்தன. இயற்கை சூழலில் மிக அருகில் அவ்வளவு பெரிய பறவைகளைப் பார்த்தது இதுதான் முதல் முறை. 70 சதவிகிதம் வெள்ளையும் வாலில் இளஞ்சிவப்பும் கழுத்து, கால்களுக்கு அருகில் கறுப்பும் கலந்த அற்புதமான இயற்கை கலவை. நீளமான, மெல்லிய உறுதியான கால்கள். இரையைச் சுலபமாகப் பிடிக்கும் விதமாக நீண்ட, கூர்மையான அலகு.

திடீரென்று ஒரு நாரை இறக்கைகளை விரித்தபடி நின்றது. எல்லோரும் வேகமாக கேமராவில் பிடித்தனர். சட்டென்று அப்படியே மேலே எழுந்து வேகமாக ஒரு ரவுண்ட் அடித்தது. பறக்கும் போது இறக்கையைச் சுருக்கிக்கொண்டு, கால்களைப் பின்னோக்கி நீட்டியபடி சென்றது. ஓர் அம்பு பறந்து சென்றது போன்ற பிரமை உண்டானது.

நாங்கள் புறச் சூழல் மறந்து பார்த்துக் கொண்டிருந்தோம். இன்னொரு பறவை சர்ரென்று பறந்து, தண்ணீரில் ஏதோ ஓர் இரையை நொடியில் எடுத்துக் கொண்டு, மீண்டும் கூட்டுக்குச் சென்றது.

பறவைகள் யாரையும் கண்டுகொள்ளாமல், தங்கள் கடமைகளைச் செய்துகொண்டிருந்தன. ஆனால் நம் பார்வைக்கு, பறவைகள் தங்களுக்குத் தெரிந்த வித்தைகளைக் காட்டுவதாகவும், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதாகவும் தோன்றியது. கேமராவுக்கு நாரையைப் போல் மனிதர்கள் கூட ஒத்துழைப்பு தந்திருக்க மாட்டார்கள்.

நுழைந்த இடத்திலேயே வெகு நேரம் நின்று விட்டோம் என்பதை உணர்ந்ததும், நகர ஆரம்பித்தோம். தண்ணீருக்கு நடுவில் ஆங்காங்கே திட்டுத்திட்டாகப் படர்ந்த பச்சை மரங்கள்.( மாங்குரோவ் காடுகள்). ஒவ்வொரு மரத்திலும் நூற்றுக்கணக்கான பறவைகள் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரித்து குடும்பம் நடத்திக் கொண்டிருக்கின்றன. பெண் பறவைகள் அடை காத்துக்கொண்டிருக்கின்றன. ஆண் பறவைகள் உணவு தேடி வந்து கொடுக்கின்றன.

ஏரியின் கரையோரம் நிறைய இருக்கைகள். நடுநடுவே ஐம்பது பேர் உட்காரும் அளவுக்கு சிமெண்டால் கட்டப்பட்ட இடங்கள். ஏராளமான குப்பைத் தொட்டிகள். போதுமான கழிவறைகள், சுத்தமாகவும் இருந்தன! சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்தப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. பறவைகளை ஏரியல் வியூவில் பார்க்க வசதியாக இரண்டு பெரிய டவர்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

நாரை இனத்தைச் சேர்ந்த கார்மரண்ட், இக்ரெட் போன்ற பறவைகள் மரங்களில் தென்பட்டன. வித்தியாசமான வாத்துகள் தண்ணீரில் நீந்திக்கொண்டிருந்தன. பறவைகளின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் அமர்ந்து மதிய உணவைச் சாப்பிட்டோம்.

வேடந்தாங்கலுக்கு வந்திருக்கும் பறவைகள் எல்லாம் வெளிநாட்டு விருந்தாளிகள். பாஸ்போர்ட், விசா ஏதுமின்றி ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் இந்த விருந்தாளிகள் வேடந்தாங்கலுக்கு வருகின்றன. எல்லாப் பறவைகளும் ஒரே நாட்டைச் சேர்ந்தவை அல்ல. சைபீரியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா என்று பல நாட்டிலிருந்தும் பறவைகள் வந்து ஒற்றுமையாகத் தங்கி, குடும்பம் நடத்தி, இனப்பெருக்கம் செய்து, புதிய உறுப்பினர்களுடன் தங்கள் சொந்த மண்ணை அடைகின்றன.

பறவைகள் ஏன் இவ்வளவு தூரம் இடம் பெயர்கின்றன?

பருவ நிலை மாற்றம், இனப் பெருக்கம், உணவு போன்றவை தான் பறவைகளின் இடப் பெயர்ச்சிக்கு முக்கியமான காரணங்கள். சைபீரியா போன்ற இடங்களில் இது கடும் குளிர் காலம். உணவும் சரியாகக் கிடைக்காது. இனப் பெருக்கம் செய்ய முடியாது. அதனால்தான் பறவைகள் தங்களுக்கு ஏற்றச் சூழல் தேடி பல்லாயிரம் மைல் தூரம் கடந்து வருகின்றன.

பறவைகள் பயணிக்கும் பாதையை எப்படி நினைவு வைத்துக்கொள்கின்றன என்பது இன்னும் அறிவியலுக்கு சவாலான கேள்வியாக இருக்கிறது.

நிறைய மக்கள் வருகிறார்கள். ஆர்வம் உள்ளவர்கள் நீண்ட நேரம் தங்குகிறார்கள். பலர் சட்டென்று பார்த்துவிட்டு, சென்று விடுகிறார்கள். மாலை 5.45 - 6.30 வரை உள்ள காட்சிதான் வேடந்தாங்கலின் ஹைலைட்.

நாங்கள் டவர் மீது ஏறி நின்றோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பஞ்சு வெடித்த பருத்திக் காடு போல பறவைகள் மரங்களில் பூத்திருந்தன. இப்போது பறவைகளின் காச் மூச் சத்தம் அதிகமாகக் கேட்டது. சூரியன் மெல்ல மறைய ஆரம்பித்தது. ஐம்பது, நூறு என்ற கணக்கில் பல விதமான பறவைகள் கூட்டம் கூட்டமாகக் கூடுகளை நோக்கித் திரும்பிய காட்சியைப் பார்த்தால் மட்டுமே உணர முடியும்.

இருள் சூழ, பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. பனி பெய்ய ஆரம்பித்தது. பறவை தோழர்களைப் பிரிய மனமின்றி, கிளம்பினோம். பறவைகளின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தது. வாசலுக்கு வந்து புறச் சூழலில் ஐக்கியமாக நேரம் பிடித்தது.

படங்கள் : முகில்

3 comments:

Sathish K said...

வேடந்தாங்கலுக்கே போய் வந்த உணர்வு. புகைப்படங்கள் ஏதாவது இருந்து இருந்தால் இன்னும் அழகாய் இருந்து இருக்கும்.

TAMILSUJATHA said...

சதீஷ்,
இரண்டு படங்களை இணைத்திருக்கிறேன்.

Sathish K said...

மிக்க நன்றி. உங்கள் பதிவுக்கு அழகு சேர்க்கிறது.