Sunday, December 14, 2008

எரியும் பனிக்காடு - இன்னும் அணையாத நெருப்பு

என்ன உருவம் என்று சொல்ல முடியாதபடி பள்ளமும் மேடுமாக நிமிர்ந்து, பரந்து நிற்கும் மலைகள். அதன்மீது பல வண்ணப் பச்சை நிறங்களில் போர்த்தப் பட்டிருக்கும் தேயிலைச் செடிகள். மலை முகடுகளைத் தொட்டுச் செல்லும் வெண்ணிற மேகங்கள். மேகங்களைத் தாண்டி கசிந்து வரும் இளம் சூரியக் கதிர்கள். மென்மையான குளிர் என்று எப்போதும் வசீகரித்துக் கொண்டிருக்கும் இடம் தேயிலைத் தோட்டம். மூணாறு, நீலகிரி, வால்பாறை போன்ற தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம்.

சென்ற ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் பல புத்தகக் கடைகளில் எரியும் பனிக்காடு புத்தகத்தைப் பார்த்தேன். என் கவனத்தை அந்தப் புத்தகம் ஈர்த்தாலும் ஏனோ நான் வாங்கவில்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்தப் புத்தகத்தைப் பற்றி என் அப்பா சொன்னபோது வாங்காமல் விட்டது வருத்தமாக இருந்தது. புத்தகம் கைக்கு வந்த பிறகு என் இயல்பையே கொஞ்சம் மாற்றி விட்டது. தூக்கம் தொலைந்தது. நான் வெகு விரைவில் படித்துமுடித்த சமீபத்திய புத்தகம் இதுதான். படிக்க ஆரம்பித்துவிட்டால் முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்கவேண்டியிருக்கும்.

1920 முதல் 1930 வரை தேயிலைத் தோட்டங்களில் காணப்பட்ட சூழ்நிலையை வைத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம். பெயர் Red Tea. ஆசிரியர் பி.ஹெச். டேனியல். தலைமை மருத்துவ அதிகாரியாக வால்பாறை காரமலை எஸ்டேட்டில் வேலை செய்தவர் டேனியல். தேயிலைத் தோட்டத்தின் கொடூர முகத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறார். இதில் வரும் கதாபாத்திரங்கள் மட்டுமே கற்பனையானவை. சம்பவங்கள் அனைத்தும் கற்பனைக்கு எட்டாத நிஜம்.

1925-ம் ஆண்டில் திருநெல்வேலி, மயிலோடை கிராமத்தில் வசிக்கும் கருப்பன் - வள்ளி தம்பதியிடமிருந்து இருந்து தொடங்குகிறது கதை. விவசாயமும் இல்லாமல் வேலையும் இல்லாமல் கஷ்டப்படும் கருப்பன், மேஸ்திரி சங்கரபாண்டியனைச் சந்திக்க நேர்கிறது. அவர், ’எஸ்டேட்டில் பாலும் தேனும் ஓடுகிறது, நீங்கள் இருவரும் சந்தோஷமாக ஒருவருடம் சம்பாதித்துவிட்டு, கை நிறைய பணத்துடன் ஊர் திரும்பி, பணக்காரனாக வாழலாம்’ என்று சொல்லி, நாற்பது ரூபாயும் கொடுக்கிறார். கருப்பன் - வள்ளியைப் போல பல குடும்பங்கள் வால்பாறைக்கு வந்து சேர்கின்றன. மேஸ்திரி சொன்னபடி இல்லாமல் அங்கிருந்த சூழ்நிலை முற்றிலும் நேர்மாறாக இருக்கிறது.

பெண்கள், குழந்தைகள் இலை கிள்ளவும் ஆண்கள் விறகு வெட்டுதல் போன்ற வேலைகளுக்கும் அனுப்பப்படுகின்றனர். மாட்டுக் கொட்டடியை விடவும் மோசமான இடம் தங்குவதற்காக அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. மிகச் சிறிய இடத்தை இரண்டு குடும்பங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். தினமும் செய்யும் வேலைக்கு கணக்கு வைத்துக்கொள்வார்கள். வாராவாரம் ரேஷனில் அவர்களுக்கு நிர்ணயித்த உணவுப் பொருள்கள் வழங்கப்படும். கறிக்கடையில் அவர்களுக்கு கடனுக்கு கறி கொடுக்கப்படும். வேலைக்குப் போகா விட்டால் ரேஷனில் உணவு தரமாட்டார்கள்.

ஆண்டு இறுதியில் ஒவ்வொரு கூலிக்கும் கணக்குப் பார்க்கப்படும். உணவு, கறி, கடன் எல்லாம் போக மீதி இருந்தால் பணம் கொடுக்கப்படும். படிப்பறிவு இல்லாதவர்களை, போலி கணக்கு எழுதி ஏமாற்றிவிடுகிறார்கள். வருடத்துக்கு இரண்டு, மூன்று முன்று முறை வரும் மலேரியா, டைபாய்டு, காலரா போன்ற நோய்களால் வேலைக்குப் போக முடியாவிட்டால் இரண்டு, மூன்று ரூபாய் கூட மிஞ்சாது. அதனால் அவர்கள் அடுத்த ஆண்டும் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். இப்படி ஒரு குடும்பம் அந்த நரகத்துக்குள் விழுந்தால் மூன்று ஆண்டுகளுக்குள் மீண்டு வருவது என்பது முடியவே முடியாத விஷயம்.

மலைப் பிரதேசத்தில் மழைப் பொழிவு என்பது சர்வசாதாரணமானது. ஒவ்வொருவருக்கும் ஒரு கம்பளிதான் கொடுக்கப்பட்டிருக்கும். மழைக்காக ஒதுங்கி நிற்க முடியாது. கம்பளியைப் போர்த்திக்கொண்டு, சகதியில் கால் ஊறிப்போக, நாள் முழுவதும் மழையில் இலை பறிக்க வேண்டும். எடையும் குறையக்கூடாது. இரவு நேரத்தில் கடுமையான குளிர் நிலவும். கம்பளியைக் காய வைக்க நேரம் இல்லாமல், ஈரத்துடனே போர்த்திக்கொண்டு படுக்க வேண்டும்.

சுகாதாரமற்றச் சூழல், குளிர், பாதுகாப்பில்லாத தண்ணீர் போன்றவற்றால் டைபாய்டு, மலேரியா, காலரா போன்ற அழையா விருந்தாளிகள் பருவம் தவறாமல் படையெடுத்துவந்து விடுவது வழக்கம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் மருத்துவமனை கிடையாது. மருத்துவமனை என்ற பெயரில் படிக்காத கம்பவுண்டர் ஒருவர் எல்லா நோய்க்கும் குயினைன் என்ற மருத்தைக் கொடுத்து, மலமும் சிறுநீரும் தேங்கியிருக்கும் அறையில் படுக்கச் செய்துவிடுவார். இந்தக் கசப்பு மருந்துக்குப் பயந்து உயிர் விட்டவர்கள் பலர். சரியான நோய் கண்டுபிடிக்கப்படாமலும், சரியான மருந்துகள் இல்லாமலும் ஒவ்வொரு நோய் வரும்போதும் கூட்டம் கூட்டமாக மனிதர்கள் செத்துப்போயிருக்கிறார்கள். அவர்களைச் முறையானபடி புதைக்க வழியில்லாமல், கூட்டமாகப் புதைத்த சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

இதுபோன்ற நோய்களில் இருந்து யாரும் தப்ப முடியாது. நோயால் தாக்கப்பட்டாலும் வேலை செய்ய வேண்டும். வழியே இல்லாதபோது மட்டும் விடுமுறை தருவார்கள். சம்பளம் கிடையாது. கடன் வாங்குவார்கள். அந்தக் கடனை அடைக்க மீண்டும் ஓர் ஆண்டு வேலை செய்ய வேண்டும். இப்படி நோயும் கடனும் அவர்களை ஆண்டுக்கணக்கில் கொத்தடிமைகளாக வைத்திருக்கும். அங்கிருந்து தப்பிக்கவும் முடியாது. தப்பிக்க நினைத்தவர்களை அடித்தே கொன்று விடுவர். (எஸ்டேட்டில் இருந்து தப்பிப்பவர்களைப் பிடிப்பதற்கு என்று ஆங்கில அரசாங்கம் சட்டமே கொண்டு வந்துள்ளது. பிடிபட்டால் அபராதம், சிறை தண்டை போன்றவை கிடைக்கும்).

பெண்கள் பாலியல் கொடுமைக்கும் உள்ளாக வேண்டியிருந்தது. இலைகளைக் கிள்ளிக் கொண்டிருக்கும்போது ஒருபுறம் அட்டைப்பூச்சிகள் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கும். இன்னொரு புறம் ஆங்கில அதிகாரிகள் அசிங்கமான வார்த்தைகளாலும், அருவருப்பூட்டும் சில்மிஷங்களாலும் பெண்களிடம் நடந்துகொள்வார்கள். இதைப் பொறுத்துக்கொள்ளும் பெண்கள் கணக்கில் ஓர் அணா கூடுதலாகக் கணக்கு எழுதப்படும். எதிர்ப்பவர்கள் கேவலமாகத் திட்டப்படுவதுடன், அவர்கள் பறித்த இலைகளின் எடையும் குறைவாக மதிப்பிடப்படும்.

இப்படிப்பட்ட சூழலில் ஆபிரஹாம் என்ற மருத்துவர் அங்கு வந்து சேர்கிறார். மருத்துவமனை, மருந்துகளைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். தன்னால் முடிந்த வரை ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று முயற்சி செய்கிறார். இளம் தம்பதியான கருப்பனும் வள்ளியும் என்ன ஆகிறார்கள் என்பதுடன் கதை முடிகிறது.

வாயைத் திறந்தாலே, ‘ப்ளடி இண்டியன்ஸ், ஸ்டுபிட்’ என்றே அழைக்கிறார்கள் ஆங்கில அதிகாரிகள். அவர்களுக்கு முன் இந்தியர்கள் யாரும் செருப்பு போடக்கூடாது. மழை பெய்தாலும் குடை பிடிக்கக்கூடாது. நாகரிகத்தில் தங்களை முன்னேறியவர்களாகச் சொல்லிக்கொள்ளும் ஆங்கிலேயர்களிடம் எழுத்துப் பணியாளர்களும் கூலிகளும் எப்படிச் சுரண்டப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது இந்நூல். நாடே அடிமைபட்டுக் கிடக்கும் சூழலில் இந்தக் கொத்தடிமைகளின் கூப்பாடு வெளியில் தெரியவே இல்லை.

தாம் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை மிக அழுத்தமாகப் பதிவு செய்த எழுத்தாளர்களில் டேனியல் மிக முக்கியமானவர். அவர் மருத்துவ அதிகாரியாக மட்டும் எஸ்டேட்டில் பணிபுரியவில்லை. தொழிலாளர்களின் கஷ்டத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு, அதிலிருந்து மீட்பதற்கும் போராடியிருக்கிறார். தொழிற்சங்கத்தை அமைத்திருக்கிறார்.

டேனியல் போலவே இந்தப் புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்திருக்கும் இரா. முருகவேள் பணியும் முக்கியமானது. கதைக் களம் தமிழ்நாட்டில் நடக்கிறது என்றாலும் மொழிபெயர்ப்பு என்பது எந்த இடத்திலும் தெரிந்துவிடாதபடி, தமிழில் எழுதப்பட்டதைப் போலவே அற்புதமாகச் செய்திருக்கிறார். படிக்கும்போது கதாபாத்திரங்களுடன் நாமும் நனைகிறோம், குளிரில் நடுங்குகிறோம், அட்டையால் உறிஞ்சப்படுகிறோம், காய்ச்சலால் துன்பப்படுகிறோம், அதிகாரிகளால் அவமானப்படுகிறோம், இயலாமையால் வெம்பிப்போகிறோம்...

தேயிலைத் தோட்டங்களைப் பார்க்கும்போதும், தேநீர் குடிக்கும்போதும் இவர்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை. எரியும் பனிக்காடு... இன்னும் அணையாத நெருப்பு.

எரியும் பனிக்காடு, விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர் - 641015

6 comments:

மருதன் said...

நல்ல புத்தகம் ஒன்றை சிபாரிசு செய்ததற்கு நன்றி. நீ்ங்கள் வாசித்த பிற நூல்களைப் பற்றியும் எழுதுங்கள்.

Che Kaliraj said...

It Is a another face of imperilism. capital countries are give bad to poor countries. bad means, it is no define words.

anujanya said...

கேள்விப் பட்டிருக்கிறேன். படிக்க வேண்டும். நன்றி.

அனுஜன்யா

Sengathir Selvan K said...

I have bought this novel from Chennai, to kill the time during traveling..

But, on reading, the nature of injustices brought out to the tea estate workers, instantly brought tears in my eyes and the fellow passengers started looking at me awkwardly..

I could not complete the reading fully since I am too strong to digest such things...

Anonymous said...

I haven't read this book. but I had read the novel "THENEER"(TEA)tamil(author,D.Selvaraj)on the same issue. when I was 15 yr old. awesome novel.

rama, bahrain

நாதாரி said...

எரியும் பனிக்காடு அங்கே வாழ்ந்த மனிதாபிமானமுள்ள ஒரு டாக்டரால் எழுதப்பட்டது
தேநீர் வெளியிலிருந்து ஒருவரால் எழுதப்பட்டது